ஆறாம் வகுப்பு தமிழ் - இயல் இரண்டு
சிலப்பதிகாரம்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்
அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
-இளங்கோவடிகள்
வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!
மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த
வெண்குடை போல அருளை வழங்கும்
வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!
கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!
காவிரி நாடன் சோழனின் ஆணைச்
சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும்
கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!
வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!
கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும்
மன்னனைப் போல முகில்வழி சுரக்கும்
வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!
சொல்லும் பொருளும்
திங்கள் - நிலவு
கொங்கு - மகரந்தம்
அலர் - மலர்தல்
திகிரி - ஆணைச்சக்கரம்
பொற்கோட்டு - பொன்மயான சிரத்தில்
மேரு - இமயமலை
நாமநீர் - அச்சம் தரும் கடல்
அளி - கருணை
பாடலின் பொருள்
தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.
காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!
அச்சம்தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!
நூல் வெளி
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
.
காணி நிலம்
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அங்குத்
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணி அருகினிலே - தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - - நல்ல
முத்துச் சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும் அங்குக்
கத்துங் குயிலோசை சற்றே வந்து
காதில் படவேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம்
தென்றல் வரவேணும்
- பாரதியார்
பொருளும் சொல்லும்
காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
சித்தம் - உள்ளம்.
பாடலின் பொருள்
காணி அளவு நிலம் வேண்டும். அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும் .நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும்.
அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.
நூல் வெளி
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்துள்ளார் .பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார். பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
சிறகின் ஓசை
பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்ரை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
தலையில் சிறகு வளர்தல்
இறகுகளின் நிறம் மாறுதல்
உடலில் கற்றையாக முடி வளர்தல்
ஒருவகைப் பறவை வேறு வகைப்
பறவையாக உருமாறித் தோன்றும் அளவிற்குக்கூடச் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
கப்பல் பறவை
சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird). இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் "நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? உங்களுக்குத் தெரியுமா? சிட்டுக் குருவிதான் அது.
உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால்தான் விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப் பறந்து விட்டான் என்று கூறுகிறோம்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள்
மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.
பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை
ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும். நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள் ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.
தோட்ட பட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாரதியார் பாடினார். சமைப்பதற்குத் தன் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர்.
இந்தியாவின் பறவை மனிதர்
இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்!
பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது!
என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி. இவ்வுண்மையை நாமும் உணர்ந்து இயற்கையைப் போற்றிப் பறவைகளைக் காப்போம்.
ஆர்டிக் ஆலா.
உலகிலேயே நெடுந்தொலைவு 22.000கி.மீ. பயணம் செய்யும் பறவையினம்
பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் - 20
கிழவனும் கடலும் (The Oldman and the Sea.) என்னும் ஆங்கிலப் புதினம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு படக்கதையாக இங்குச் சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. . இந்நூல் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே
கதையின் நாயகன் - சண்டியாகோ
மீன் பிடிக்க கற்றுக்கொள்ளும் சிறுவன் - மனோலின்
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
எழுத்துகள் இரண்டு வகைப்படும்
1. முதல் எழுத்துகள்
2. சார்பு எழுத்துகள்
முதல் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
சார்பு எழுத்துகள்
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
இவ்வகுப்பில் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு சார்பெழுத்துகள் பற்றிக் காண்போம்.
உயிர்மெய்
மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
ஆய்தம்
மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
நுட்பமான ஒலிப்புமுறையை உடையது. .
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்
தனித்து இயங்காது.
முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்
கலைச் சொல் அறிவோம்
கண்டம் - Continent
தட்பவெப்பநிலை - Climate
வானிலை - Weather
வலசை Migration
புகலிடம் - Sanctuary
புவிஈர்ப்புப்புலம் - GravitationalField
திருக்குறள்
மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபாவை அறநூல்கள். அறநூல்களில் 'உலகப் பொது மறை' என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம்; வாழ்வில் பின்பற்றுவோம்.
கடவுள் வாழ்த்து
1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். அதுபோல ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம்.
வான் சிறப்பு
2. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை உரியகாலத்தில் பெய்யாது போனால், உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்.
3 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.
நீத்தார் பெருமை
4. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாது என்பவர் சிறியோர்.
மக்கட்பேறு
5. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி.
6 ஈன்ற பொழுவின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.
அன்புடைமை
7 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
8 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
இனியவை கூறல்
9 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.
10. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.
நூல் வெளி
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. "திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். "என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்" என்று மகிழ்ச்சியுட கூறினார்.