தமிழ் இலக்கணம் - நாள் 1
(முதல் எழுத்து, சார்பெழுத்து, உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் மற்றும் ஆயுதம் )
மொழியை திருத்தமாகப் பேசவும் எழுதவும் துணை புரிவது இலக்கணம்.
இலக்கணம் மொழியின் அமைப்பையும் அழகையும் உணர்த்துகிறது.
இலக்கணம் - இலக்கு + அணம் என பிரியும்
இலக்கு - என்பதன் பொருள் குறிக்கோள்
அணம் - என்பதன் பொருள் அழகு
அழகை குறிக்கோளாகக் கொண்டது இலக்கணம்
தமிழ் இலக்கணம் 5 வகைப்படும், அவை
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி
1.எழுத்து
எழுதப்படுகின்ற காரணத்தினாலே இதை எழுத்து என்கிறோம்
இது இரண்டு வகைப்படும்
1.முதலெழுத்து,
2.சார்பெழுத்து
1.முதலெழுத்து - (மொத்தம் - 30)
மொழிக்கு முதல் ஆனதாகவும் தனித்து இயங்கக் கூடியது முதல் எழுத்தாகும்.
உயிரும் உடம்புமா முப்பது முதலே - நன்னூல்
முதலெழுத்துகள் இரண்டு வகைப்படும்
1.உயிரெழுத்து
2.மெய்யெழுத்து
உயிர் எழுத்து :- (மொத்தம் - 12 )
தமிழ் மொழிக்கு உயிராய் இருக்கக்கூடியது உயிர் எழுத்து
1 உயிர் குறில் - மொத்தம் - 5
( 1 மாத்திரை )
அ, இ, உ,எ,ஒ
2 உயிர் நெடில் - மொத்தம் - 7
( 2 மாத்திரை )
ஆ, ஈ ,ஊ,ஏ, ஐ, ஓ, ஒள
மாத்திரை - ஒர் எழுத்து ஒலிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு.
(இயல்பாக மனிதன் கண் சிமிட்டுவதற்கு அல்லது இமைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு மாத்திரை)
மெய் எழுத்து - 18
(½ மாத்திரை)
தமிழ் மொழிக்கு உடலாய் இருக்கக்கூடிய எழுத்து மெய்யெழுத்து (மெய் - உடல்)
இவை ஒலிக்கும் முறையால் மூன்று வகைப்படும்
1.வல்லினம் - வன்மையாக ஒலிக்கும்
க், ச், ட், த், ப், ற்
2.மெல்லினம் - மென்மையாக ஒலிக்கும்
ங், ஞ், ண், ந், ம், ன்
3.இடையினம் - வன்மையாகவும் அல்லாமல் மென்மையாகவும் அல்லாமல் இரண்டிற்கும் இடையில் ஒலிக்கும்
ய், ர், ல், வ், ழ், ள்
2 - சார்பு எழுத்துகள்
முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்களை சார்பெழுத்து என்கிறோம்.
இது 10 வகைப்படும்.
1 உயிர்மெய்
2 ஆயுதம்
3 உயிரளபெடை
4 ஒற்றளபெடை
5 குற்றியலுகரம்
6 குற்றியலிகரம்
7 ஐகாரகுறுக்கம்
8 ஔகாரகுறுக்கம்
9 மகரகுறுக்கம்
10 ஆயுதகுறுக்கம்
1.உயிர்மெய் மெய் - 216
உயிர் எழுத்துக்களையும், மெய் எழுத்துகளையும் சார்ந்து இருப்பதால் இதனை சார்பெழுத்து என்கிறோம் .
இவை இரண்டு வகைப்படும்
1.உயிர்மெய் குறில் - 90
2.உயிர்மெய் நெடில்- 126
1.உயிர்மெய் குறில் - 90
18 (மெய் எழுத்து )× 5 (உயிர் குறில் ) = 90 உயிர்மெய் குறில்.
எடுத்துக்காட்டு :-
க்+அ = க
ம்+ இ = மி
2உயிர் மெய் நெடில் - 126
18 (மெய் எழுத்து ) ×7(உயிர் நெடில்) = 126 (உயிர் மெய் நெடில் )
எடுத்துக்காட்டு :-
க்+ ஆ = கா
வ் + ஏ = வே
2.ஆயுத எழுத்து
போர் வீரர்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதத்தால் காணப்படும் மூன்று குவிய புள்ளிகள் போன்று இருப்பதால் ஆயுத எழுத்து என்று கூறுவர்
இவ்வெழுத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளதால் முப்புள்ளி எனவும், முக்காற்புள்ளி எனவும் கூறுவர்.
இது உயிரோடும் மெய்யோடும் சேராமல் தனித்து இருப்பதால் தனிநிலை எனவும் கூறுவர்
ஆயுத எழுத்து சொல்லின் இடையில் மட்டும் வரும்.
அவ்வாறு வரும் ஆயுத எழுத்தின் முன்பு குறிலும், அவ்வெழுத்தின் பின் வல்லின உயிர்மெய் குறிலும் வரும்.
எடுத்துக்காட்டு :-
அஃது- அ ( குறில்) +ஃ + து (உயிர்மெய் குறில்)
எஃகு - எ( குறில் ) +ஃ + கு (உயிர் மெய் குறில்)
அஃறிணை
நாளை அளபெடை காண்போம்